காலணி

 

அணிகலன் ஒவ்வொரு வாழ்க்கைக்கும் இன்றியமையாதது. ஆடை அணிகலன் என்று சொல்வது வழக்கம் உடுக்கும் உடை , நகைகள் , கைக்கடிகாரம் மூக்குக்கண்ணாடி, செருப்பு , என்று நாம் எதையெல்லாம் அணிகின்றோமோ அவையெல்லாம் அணிகலன்கள் .

அணிகலனில் மற்ற எல்லாவற்றைக் காட்டிலும் ஒன்று மட்டும் மிகவும் வித்தியாசமானது அதுதான் செருப்பு . உடை உடலுக்கு அழகைக்கூட்டுகிறது , அதே நேரத்தில் மானத்தை மறைக்கிறது. தங்க நகைகள் அழகைத்தருகிறது , கௌரவத்தை கொடுக்கிறது . மூக்கு கண்ணாடி அழகைத்தருகிறது பார்வைத்திறனைத் தெளிவாக்குகிறது.

இவற்றையெல்லாம் நாம் தினந்தோறும் தூக்கி சுமக்கின்றோம் . ஒரு நாள் ஆடையில்லாமல் செல்வோம் என்று செல்ல முடியாது . அணிகலன் என்பதை அணிந்தும் செல்லலாம் , அணியாமலும் இருக்கலாம் . நகைகள் அதிகமாக அணிந்து செல்லம் போது கௌரவம் இருக்கும் அதே போல் ஆபத்தும் இருக்கும் . கைக்கடிகாரத்தை ஒரு நாள் மறந்து கட்டாமல் விட்டு விட்டால் மணிப்பிச்சை கேட்க வேண்டியிருக்கும் . மூக்கு கண்ணாடியை மறந்து வைத்து விட்டு சென்று விட்டால் எவ்வளவு படித்திருந்தும் அடுத்தவரிடம் படிக்க சொல்லி கேட்க வேண்டியிருக்கும் . இவை அனைத்தையும் வெளியில் சென்றுவிட்டு வீட்டுக்கு வந்தவுடன் பத்திரப்படுத்துகிறோம்.

ஆனால் . இந்த செருப்புகாலணி என்று சொல்லக்கூடிய அணிகலன் , நம்மை ஏற்றி செல்கிறது . காலுக்கு பாதுகாப்பு கொடுக்கிறது . நடக்கும் போதெல்லாம் மிதி வாங்கும் ஒரே அணிகலன் செருப்புதான். அதன் தேவை முடிந்ததும் எங்காவது மூலையில் உதறி விட்டு விடுகிறோம் . இருந்தும் , நாம் நடக்கும் போது நமக்கு பாதுகாப்பு தர செருப்பு நமது காலை இறுகப்பற்றிக்கொள்கிறது.

எத்தனை மிதி வாங்கினாலும் காலை விடுவதில்லை.

கோவிலுக்குள் சாமி கும்பிடும் போது உடலில் எத்தனை அணிகலன் பூண்டிருந்தாலும் ஞாபகத்திற்கு வராது . அங்கே கோவில் வாசலில் கழட்டிப்போட்ட செருப்பின் ஞாபகம் வந்து கொண்டேயிருக்கும்.
காலில் போட்டு மிதித்தாலும் கடவுள் சன்னதியில் நினைக்க வைப்பது செருப்பு.

சாமிக்கு கிடாய் வெட்டுகிறார்கள் என்றால் நாத்திகனும் கோவிலுக்கு வருவான் கறி சாப்பிடுவதற்காக.

சுப்பு அழைத்தான்மச்சான் நாளைக்கு பாண்டி கோயில்ல கிடாய் வெட்டுறோம் எல்லோரும் வந்துருங்க.
சரிடாமாப்ளே வந்துர்றேன் வாத்துமணி சொன்னான்.

மறுநாள் காலைல வாத்துமணி அரசியல்வாதி போல பாண்டிகோயில் வாசல்ல வண்டியெ நிறுத்திட்டு , வாசல்ல செருப்பை கழட்டி போட்டுட்டு உள்ளே போனான்.

வாடா வாத்துவாடா மணிஎன்று ஏக வரவேற்பு. நேரா பந்திக்கு போயி நல்ல பெரிய இலையா பாத்து உக்காந்துட்டான்.

கறியெ அள்ளி அள்ளி வைக்க திண்ணுட்டு வெத்தலை பாக்கு போட்டு வெளியெ வந்து மாப்ளை அப்ப வரட்டுமா என்றான் வாத்து.

வெளில வந்து பாத்த வாத்துக்கு ஒரே அதிர்ச்சி.

எங்கப்பாஏஞ்செருப்புமாப்ளை இப்பத்தான்யா முண்ணூத்தி தொண்ணூத்தி ஒம்பது ரூபா தொண்ணூத்தொம்பது பைசாவுக்கு வாங்கிட்டு வந்தேன் . நேரா இங்கதான்யா வர்றேன். களவானிப்பயலுக செருப்பெ களவாடிப்புட்டாங்களே !

மச்சான் ஏஞ்செருப்பையும் தொலைச்சுப்புட்டுத்தான் உக்காந்துருக்கேன்.

வெரமானவங்கெல்லாம் ப்ளாஸ்டிக் பைல செருப்பை கழட்டி போட்டுட்டு கையில வச்சுருக்காங்கெ பாரு . நமக்கெல்லாம் வௌரம் பத்தாது மச்சான்.

வாத்து ஓரமாக ஒதுங்கி நின்றான் . செருப்புக்கு செருப்பு எடுக்காமெ போறதில்ல . எவனாவது சிக்காமலா போவான் நீண்ட நேரம் கழித்து ஒருத்தர் வந்தார். செருப்பை கழட்டி போட்டுவிட்டு உள்ளே விறுவிறுன்னு பந்தியை நோக்கி சென்றான் .

வாத்துமணி எங்கோ பாத்துக்கொண்டிருந்துவிட்டு கொஞ்சநேரம் கழித்து பந்தியை நோட்டமிட்டான் .
செருப்பை கழட்டி சென்றவர் ஆட்டெலும்பிடம் போராடிக் கொண்டிருந்தார்.

வாத்துமணி மெதுவாக செருப்பு குவியல் அருகில் சென்று பார்த்தான் .

கழட்டி போட்டது புத்தம் புது செருப்பு நாணூத்தி முப்பத்தொம்பது ரூபா தொண்ணூத்தொம்பது பைசாமெதுவா காலில் மாட்டினான்.

பின்னாலிருந்து சத்தம் கேட்டது. யோவ்கேனத்தனமா இருக்கு இவ்வளவு நேரமா இந்த மாதிரி செருப்புக்குதான்யா காத்துக்கிட்டிருந்தேன் , போய்யா அந்தப்பக்கம் அடுத்து எவனாவது வருவான் அப்ப பாத்து எடுத்துக்கோ
வாத்துமணி அசடு வழிந்ததுடன் அதிர்ச்சியாகிப் போனான். அடப்பாவிகளாஇதுல கூடவாடா சீனியாரிட்டி!.

Comments

Popular posts from this blog

விடு பாப்பா ... எடுத்துட்டு போகட்டும் ...

ஒரு நாள் …இரவு ஜெயித்தது…