குறைகுடம் கூத்தாடும்…
சங்கரபாண்டி நாலாம் வகுப்பு கூட முடிக்கலை … ஆனா வியாபாரத்திலேயும் மக்களை தன் வழிக்கு கொண்டுவர்றதில்ல படு கெட்டி.
சென்னைக்கு போயி முதலமைச்சர்றே பாக்குறேன் கவர்னரை பாக்குறேன்னு போயிட்டு , யாராவது சொந்தக்கராங்க வீட்ல மூணு நாளு தங்கிட்டு வந்து , சென்னையை பத்தி கதைகதையா பேசுவான்.
நாளிதழ்களிலும் புத்தகங்களிலும் வரும் விசயங்களை தெரிந்து கொண்டு பக்கத்தில் உள்ளவருக்கு நடந்தவற்றை நேரில் பார்த்தது போல கதை சொல்வான்.
வெள்ளையும் சொல்லையுமா வீதில நடந்தா யாருக்கு தான் சந்தேகம் வரும். சங்கரபாண்டியை பாத்தா ஒதுங்கிப் போறவங்க தான் அதிகம்.
உள்ளுர் மக்களுக்கு சங்கரபாண்டி பத்தி நல்லா தெரியும்!... அவங்ககிட்டெ கொஞ்சம் அடக்கியே வாசிப்பான்.
அரசியல் வாதி யாராவது சிக்கினா போதும் உள்ளுர் அரசியல்ல இருந்து உலக அரசியல் வரைக்கும் பேசி வம்புக்கு இழுத்து வாங்கி கட்டாமெ போக மாட்டான்.
மாட்டுவியாபாரி மாரியப்பன் சங்கரபாண்டிக்கு நெருங்கிய சொந்தம். ரொம்ப நாளா மாரியப்பனுக்கு ஒரு ஆசை பங்காளியெ எப்படியாவது பஞ்சாயத்து தலைவராக்கி பாக்கனும்னு.
தேர்தல் நெருங்கிக்கிட்டு இருக்கு …பங்காளியெ சம்மதிக்க வைக்கனும்.யோசித்தான் மாரியப்பன்.
நம்ம இனத்துல பங்காளி மாதிரி அறிவு ,பழக்க வழக்கம் யாருக்கு இருக்கு. ஒரு பயலுக்கும் கிடையாது . பஞ்சாயத்து தலைவர் ஆனா நமக்கு தானே பெருமை. தனக்கு தானே கணக்கு போட்டுக் கொண்டான்.
சங்கரபாண்டிக்கு இவ்வளவு சொன்னா போதாதா!. மாரியப்பன் சொந்த செலவுல பஞ்சாயத்து தலைவர் ஆக கசக்கவா செய்யும்.
தேர்தல் வேலை தடபுடலா நடந்துச்சு , சங்கரபாண்டி பஞ்சாயத்து தலைவர் கனவுல மிதந்தான். ஊருக்குல்ல அவனுடைய பேச்சும் நடையும் மாறிப்போச்சு. ஒலிபெருக்கியை கட்டிக்கொண்டு தான் படித்ததையும் கேட்டதையும் ஒப்பித்தான். எனக்கு வாக்களித்தால் நமது கிராமங்களை ரஷ்யாவைப் போல் மாற்றுவேன் . அமெரிக்கப் பொருளாதாரத்தை அமல்படுத்துவேன் என்றான். விமானத்தில் இலவசப் பயணம் …விண்வெளியை எட்டிப்பார்த்து வரலாம் என்றெல்லாம் வாக்குறுதி அளித்தான்.
எதிர்த்து போட்டியிட்ட ஏகாம்பரம் என்ன செய்வதென்று தெரியாமல் அமைதியாக ஓட்டுக்கேட்டார். அவர் படித்த பண்பாளர். பக்குவம் தெரியும். சங்கரபாண்டி பேச்சை கேட்டு மக்கள் வாக்களித்து விட்டால் ஒரு பக்கம் பயமாகவும் இருந்தது.
சதாசிவம் ஊர் பெரியவர் …பயப்படாதே ! ஏகாம்பரம் …ஊர் மக்களுக்கு என்ன அவனெப்பத்தி தெரியாதா என்ன? குறைகுடம் கூத்தாடத்தானே செய்யும். பொறுமையா இரு. ஆறுதல் சொன்னார்.
தேர்தல் முடிந்து வாக்கு என்னப்பட்டது…ஏகாம்பரம் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
குறைகுடம் மீண்டும் கூத்தாடிக் கொண்டிருந்தது.
Comments
Post a Comment