விட்ட(த்)தைப் பிடித்தேன்...
உய்ங்...உய்ங்...ஒரே ரீங்காரம் காதுக்க கேட்கிறது . சப்தங்களின் அர்த்தங்கள் விளங்கவில்லை.மிகவும் லேசாக இருக்கிறது.மிதப்பது போல் தெரிகிறது.தடைகளே இல்லை ...நான் செத்துவிட்டேன்.என் உருவம் ஒரே வெள்ளை வெளிச்சமாக இருக்கிறது. இதோ என்னைப்போல் இன்னும் பலர் .மேலேயும் கீழேயும் போக முடிகிறது ஆனால் ஒரு எல்லைக்கு மேல் போக முடியவில்லையே!.
என்ன நான் பேய் ரகமா...நம்ப முடியவில்லையே!. பூமியில் மனிதர்கள் ,மத்தியில் பேய்கள், மேலே தேவர்களா...ஆச்சரியம் .
என்ன ரங்கா...
திடுக்கிட்டு திரும்பினேன்,என்னைத் தெரிந்தவர்கள் இங்கேயுமா?
நான்தான் மருதன்,எப்போது வந்தாய் எப்படி வந்தாய்...
நான் சிறிது நேரம் யோசித்தேன் ...என்னால் யோசிக்க முடிந்தது.சப்திக்க முடிந்தது.ஆனால் ஒலியின் வேகம் இங்கே வித்தியாசப் பட்டிருக்கிறது.
மருதா...நான் விளையாட்டாக செய்துவிட்டேன்,முன் பின் யோசிக்காமல் செய்துவிட்டேன்.இதோ உடலில்லாமல் அலைகிறேன்.
இங்கு வருபவர்கள் எல்லாம் இதைத்தான் சொல்கிறார்கள் ...என்றான் மருதன்
அந்த தீபாவளிக் குதூகலம் ஊரையே உற்காகப்படுத்திக் கொண்டிருந்தது.மேகங்கள் அவ்வப்போது நீர்த்துணி நெய்து கொண்டிருந்தது.உற்காகத்தின் உந்துதலோடும் நனைந்ததால் ஏற்பட்ட நடுக்கத்தோடும் என் மாமனார் அழகர்காமி அதிகாலையில் கதவைத்தட்டினார்.
என்னப்பா...என் மனைவி கண்ணைக் கசக்கியவாறே கேட்டாள்.
வீட்டுக்காரர் வந்துட்டாரா?
இல்லப்பா...ஒரு வாரம் ஆச்சு ,விடிஞ்சா தீபாவளி எங்கெ இருக்கிறாரென்றே தெரியவில்லை சொல்லிக் கொண்டே நிம்மதியாக தூங்கும் இரண்டு குழந்தைகளையும் நோட்டமிட்டாள்.
அழகருக்கு இரண்டு பெண்குழநந்தைகள் மட்டும்தான்,கருப்பாயிதான் மூத்தவள் அவள் மீது அளவு கடந்த பாசம்,பத்து நாளைக்கு பெத்த பிள்ளையெ பாக்காம இருக்கமாட்டார் கட்டிக் கொடுத்தும்.வீட்டுல மீன்குழம்பு வச்சா போதும் மகள் ஞாபகம் வந்துரும் , நல்ல ஆப்பிள் பழங்களை கண்டா போதும் , அவள் ஞாபகம் வந்துரும்.அங்கிருந்து இவற்றையெல்லாம் வாங்கி சுமந்து கொண்டு வருவார்.
குழந்தைகள் மீது அன்பு வேண்டும் அது அளவு கடந்து விடக்கூடாது.ஒரு ஆயா எப்படி குழந்தைகளை பராமரிக்கிறாள்.அவள் வேளை முடிந்தவுடன் குழந்தைகளை விட்டு எவ்வளவு நிம்மதியாக பிரிந்துவிடுகிறாள்,அது போல குழந்தைகளிடம் பருவத்துக்கு தக்கபடி அன்பு காட்டவேண்டும் என்பதை அழகர் ஒரு போதும் நினைத்ததில்லை.
இதனால் கருப்பாயிக்கும் எனக்கும் அடிக்கடி மனக்கசப்பு ஏற்பட்டது.
இதோ பாரு புள்ளே உன்னை எனக்கு கட்டி கொடுத்ததுக்கு அப்புறம் மொத்த பொறுப்பும் என்னோடதுதான்.கூழோ கஞ்சியோ நான் கொடுக்கறதெ குடிக்கனும்.அதெ விட்டுட்டு உங்க அப்பா அம்மா எதையாவது வாங்கி வர்றது எனக்கு கொஞ்சம் கூட பிடிக்கலை.அவங்க என்னை பொறுப்பு இல்லாதவன்னு நினைக்கிறாங்க,மேலும் பொறுப்பு இல்லாதவன்னா ஆக்குறாங்க,நீயே யோசிச்சுப்பாரு என்றேன்.
கருப்பாயிக்கு நான் சொன்னது சரி என்று தான் பட்டது.அவள் அவளின் அப்பாவிடம் சொன்ன போது,உறவுகள் விரிசல் விடத் தொடங்கின.அழகரின் பாசம் அதற்கு இடம் கொடுக்கவில்லை.மாறாக,இன்று அதிகாலையிலேயே வந்திருக்கிறார்.
வாங்கப்பா...உள்ளே வாங்க ...கட்டிலில் தாறுமாறாக கிடந்த போர்வையை அகற்றினாள்.
இல்லம்மா நேரமில்லை...நீ உடனே ஊருக்குப் புறப்படு...இன்னும் அரை மணி நேரம் தான் இருக்கிறது அடுத்த பஸ்ஸுக்கு . தீபாவளியும் பொழுதுமா தனியா இருக்க வேண்டாம். உன் வீட்டுக்காரர் வந்தா நேரா வீட்டுக்கு வந்திருவார் என்று தைரியம் சொல்லி தயாராகச் சொன்னார்.
அவளுக்கு விருப்பமில்லை.அப்பா...அவரு இல்லாம...என்று இழுத்தாள்.
வந்துருவார்மா...புறப்படு என்றார் அழகர்.மகளுடன் தீபாவளி கொண்டாடப்போகும் சந்தோசத்தில் அழகர் சஞ்சரித்து கொண்டிருந்தார்.என் கையில் காசெல்லாம் கரைந்தது .வீட்டிற்கு போகலாமென்று,வீட்டிற்கு போனால் பெரிய பூட்டுதான் என்னை வரவேற்றது.
பக்கத்தில் ஒரு அம்மா சொன்னாள் இப்போதுதான் பஸ்ஸில் போகிறார்கள் என்று.
என் கையில் ஒரு பை,அதில் ஒரு வேஷ்டி, தொண்ணூறு பைசா,ஒரு பீடிகட்டு, ஒரு தீப்பட்டி,இவ்வளவு தான் என்னுடைய சொத்து அன்றைய தினம்.
தீபாவளி... யாரிடம் சென்று கடன் கேட்பது.எங்கு செல்வது...நான் யாரிடமும் நல்லவர்களிடம் பழகினதே இல்லையே.அவர்களை கண்டால் தலையை தொங்கப்போட்டு கொள்வேனே!
என் மனைவியும் குழந்தைகளும் கூட எனக்காக காத்திருக்கவில்லையே!.மாமனார் இன்னும் தொந்தரவு கொடுக்கிறாரே.எங்களைப் பிரித்தது போல் கூட்டிக் கொண்டு போய்விட்டாரே.வெறுப்பு உச்சக்கட்டமானது.
என் மீதே எனக்கு அளவு கடந்த வெறுப்பும் சுற்றியுள்ளவர்கள்மீது அதைவட வெறுப்பும் தோன்றியது.என் மனம் கல்லானது,சிந்தனையே இல்லை,யோசிக்கவே இல்லை.இனிமேல் எதற்காக,யாருக்காக வாழ வேண்டும்.நேராக ஊருக்கு ஒதுக்குப்புறமான பாழடைந்த கட்டடத்துக்கு சென்றேன்.
பையில் இருந்த பாலிஸ்டர் வேஷ்டியை எடுத்துக்கொண்டு விட்டத்தில் ஏறினேன்.கட்டினேன்,கழுத்தில் சுருக்கிட்டேன்,தொங்கினேன்..மூச்சுத்திணறியது...என்புருவமத்தியில் ஒரு வேதனை.
இப்போது என் உடலை நானே பார்க்கிறேன்.அது அநாதையாக தொங்கிக் கொண்டிருக்கிறது.
மாணிக்கம் அந்த வழியாகப் போய்க் கொண்டிருக்கிறான். நான் அவனை கூப்பிடுகிறேன்,ஆனால் அவனுக்கு கேட்கவில்லை தற்செயலாக திரும்பிப் பார்க்கிறான்.
ஐயோ...ரெங்கன்...என்று அலறி அடித்துக் கொண்டு வீட்டுக்கு ஓடுகிறான்.
அம்மா..அம்மா...அங்கே...ரங்கன் தூக்கிலே தொங்குறார்...மூச்சிறைக்கிறது.
அடப்பாவி...ஒரு வாரமா ஆளைக்காணாம்னு தேடிக்கிட்டிருந்தாங்க.
முட்டாப்பயலுக்கு ஒரு நல்ல நாளு பெரிய நாளு தெரியலை,தீபாவளியும் அதுவுமா செத்திருக்கான்.
சம்பளமும் போனசும் வாங்கிட்டு போனவன்தாய்யா...இந்தப்பக்கமே ஆளைக்காணாம்.
அடடா...இப்பத்தானே அவன் மாமனார் வந்து மகளையும் குழந்தைகளையும் கூட்டிட்டு போறார்.
இதுக்குத்தான்யா தெய்வ பக்திவேணும்கிறது...தெய்வத்து மேலயாவது நம்பிக்கை வரும்ல.
இப்படியெல்லாம் பேசுகிறார்கள்.நான் மீண்டும் என் உடலினுள் நுழைகிறேன்.ஒன்பது துவாரங்களின் ஒவ்வொன்றின் மூலமாக.ஆனால் என்னால் உடலில் தங்கியிருக்க முடியவில்லை.என்னைப்போல் எத்தனையோ ஆத்மாக்கள் என் உடலில் நுழைந்து வெளியேறுகின்றன.
கதறுகிறேன்...ஒவ்வொருவரையாக கூப்பிடுகிறேன்.யாருக்கும் கேட்கவில்லை.அவர்களைத் தொடுகிறேன்,அவர்கள் உணரவில்லை,மீண்டும் என் உடலின் அருகில் சென்று நின்று பார்க்கிறேன்.ஈக்கள் மொய்க்கின்றன.
இதோ ஜனங்கள் வந்துவிட்டார்கள்.என்னைப்பார்த்து ஒவ்வொருவரும் பயப்படுகிறார்கள்.தைரியசாலி போல நடிக்கிறார்கள்.எனது உடல் தொங்கும் வேஷ்டியை அரிவாளால் அறுக்கிறார் கந்தன்.
கம்புகளை வைத்து வேகவேகமாக கட்டுகிறார்கள்.என் உடலை தூக்கி வைக்கிறார்கள்,நான் அழுகிறேன்.அங்குமிங்கும் அலைகிறேன்.இறுதியில் எனது உடலுக்குள்ளேயே செல்கிறேன்,அங்கே என்னைப்போல் நூறு பேர் இந்த சிறு உடலில் எல்லோரும் உடலை அழித்துக் கொண்டவர்கள்தான்.
என் உடலை சுமப்பவர்களால் சுமக்க முடியவில்லை,பயங்கரமாக கனக்கிறது என்கிறார்கள்.
உடலுக்கு தீ வைத்துவிட்டார்கள்.அதற்குள் என்னால் இருக்கமுடியவில்லை,மற்றவர்களாலும் முடியவில்லை.வெளியில் வந்துவிட்டோம் உடலும் எரிந்துவிட்டது.
என் மனைவியைப் பார்க்கிறேன் மகனைப் பார்க்கிறேன்,ஆனால் அவர்கள் பக்கத்தில் செல்லமுடியவில்லை.வீட்டை சுற்றிலும் சாம்பல் கோடுகள் போடடிருக்கிறார்கள்.அந்தகோடுகளை நெருங்கும் போது என்னை என்னவோ செய்கிறது.எங்கு பார்த்தாலும் கோயில்கள் என்னால் உடலில்லாமல் அங்கு நடமாட முடியவில்லை.நிம்மதியில்லை...தெரியாத விசயங்களெல்லாம் தெரிகிறது எல்லாம் ஒரே நேரத்தில் தெரிகிறது.
அப்படியே சுற்றிவரும்போது இந்த பரந்த வெளியில் மட்டும் என்னைப் போன்றவர்களைப் பார்த்தேன்.தனி உலகம் இங்கே நீயும் கிடைத்துவிட்டாய்.
என்னையே நினைத்து இப்போது வருந்துகிறேன். குடித்தேன்...சீட்டாடினேன்...பெண்களிடமும் தொடர்பு கொண்டேன்...பொருள் அழிந்தது... புத்தி கெட்டது...
என் மனைவி சீட்டாட்டத்தை கண்டித்த போதெல்லாம்,"விட்டதைப் புடிக்கிறேன்"என்பேன்.இறுதியில் விட்டத்தைப் புடித்து இதோ அலைகிறேன.
Comments
Post a Comment