தன்னை மறந்து…
உலகம் பெரிது…எத்தனை வகை கல்வி , எத்தனை வகை தொழில் , எத்தனை வகை மனிதர்கள், எத்தனை வகை கவலை, எத்தனை வகை உறவு முறைகள் , எத்தனை வகை பழக்கவழக்கங்கள், எத்தனை வகை நடைமுறைகள், எத்தனை வகை செல்வங்கள் , எத்தனை வகை நோய்கள். இவற்றையெல்லாம் யோசிக்க மாடசாமிக்கு திராணி இல்லை.
மாடசாமிக்கு மார்க்கெட்ல நல்ல மதிப்புதான் …ஏன்னா மாடசாமியெப் போல எல்லா இடத்திலேயும் எல்லார்கிட்டேயும் நின்னு பேச முடியாது. அப்படி யாரும் நேரத்தை வீணடிக்கவும் மாட்டாங்க.
தான் பேசுறது தான் பேச்சு, தான் சொல்றது தான் சத்தியம் . என்ன விசயமா இருந்தாலும் கோர்வையா கோத்து சொல்றதுல்ல கெட்டிக்காரர்தான் . என்ன பேசினாலும் சுத்தி உள்ளவங்களை ஸ்தம்பிக்க வச்சு தன் பேச்சை கேக்க வைக்கிறதுல்ல பெரிய ஆளுதான்.
ஆனா … பத்து பைசாவுக்கு பிரயோசனமில்ல … எல்லாம் வெட்டிப் பேச்சுதான் . எல்லோரும் வேலையை முடிச்சுட்டு பேசுறாங்கெ …இவரு வெலைவெட்டி இல்லாமெ அவங்க கூடப் போயி மணிக்கணக்குல பேசுவாரு.
வேலை வெட்டி இல்லாமெ சித்தப்பா கஷ்டப்படுறார்ன்னு மகேசுக்கு ரொம்ப வருத்தம்.
வீட்டு வாடகை குடுக்க முடியாமெ வீட்டை காலி பண்ண சொல்லிட்டாங்க. குடும்பம் ஒரு பக்கம் இவர் ஒரு பக்கம். பார்க்க பரிதாபமா இருச்துச்சு.
ஒரு நாள் மகேஷ் சித்தப்பா வை அழைத்து நான் ஒரு வீடு பிடித்து தருகிறேன் அதில வந்து இருங்க என்றான்.
இல்ல…அதெல்லாம் ஒன்னும் தேவையில்ல. நான் பாத்துக்கிறேன் . மாடசாமிக்கு தன்மானம் இடங்கொடுக்கவில்லை.
இல்ல …சித்தப்பா …நான் சொல்றதெ கேளுங்க .. மொதல்ல குடும்பமா இருக்கப்பாருங்க
அப்புறம் எல்லாம் சரியாகும்.
கடைசியா ஒத்துக்கொண்டார்.
மகேஷ் வீட்டுக்கு அட்வான்ஸ் கொடுத்து குடியமர்த்தி வைத்தான்.
தொழில் …மகேசுக்கு சித்தப்பா ஞாபகமாகவே இருந்தது.
சித்தப்பா வேலைக்கு எங்கே போகப் போறீங்க .
முயற்சி பண்றேன் …ஒன்றும் கெடைச்சபாடில்ல.
அப்படியா… நான் ஒரு ஐடியா சொல்றேன் . கொஞ்சம் பணம் தாறேன் .. அதை வச்சு ஏதாவது தொழில் பண்ணுங்க. நானும் யாருகிட்டேயாவது வாங்கித்தான் தரணும் .
அதுக்குள்ளே என்ன தொழில் பண்ணலாம்னு முடிவெடுங்க.
ம்…சரி…
இவ்வளவு முயற்சி எடுப்பதற்காகவாவது ஒரு நன்றி என்ற வார்த்தை சித்தப்பாவிடமிருந்து வராதது கண்டு மகேசுக்கு வருத்தமாய் இருந்தது.
நாம் ஒருவருக்கு உதவினால் மற்றொருவர் நமக்கு உதவுவார் என்ற நம்பிக்கை மகேசுக்கு அதிகம் . அதனால் சித்தப்பாவின் குணத்தை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
நல்லதும் கெட்டதும் அவரவர் குணநலன்களாலேயே அமைகிறது.
வட்டிக்கு வாங்கி மகேஸ் மாடசாமிக்கு பணம் கொடுத்தான்.
மாடசாமி அதை வைத்து தொழில் நடத்தி வருகிறார். தொழில் நன்றாகத்தான் இருக்கிறது .
வருடங்கள் பல கடந்தன . இன்றளவும் மகேஸ்தான் வட்டி கட்டிக்கொண்டிருக்கிறான்.
மாடசாமியிடம் கேட்கும் போதெல்லாம் இதோ இப்ப தந்துவிடுகிறேன்…அப்போ தந்துவிடுகிறேன் என்பார். ஆனால் பணம் வந்து சேராது.
மாறாக, தான் பார்க்கும் சொந்த பந்தங்களிடமெல்லாம் மகேஸைப் பற்றி கேவலமாக பேசுவார். தன்னை மறந்து கேவலமாக பேசிக் கொண்டிருக்கிறார் . பாவம் மாடசாமி!. இன்னும் உலகத்தில் எத்தனையோ வேலைகள் இருக்கின்றன. அறியாது , தன்னை மறந்து அடுத்தவரைப் பற்றியே பேசிக்கொண்டிருக்கிறார்.
Comments
Post a Comment