யாரைத்தான் நம்புவதோ!
சென்னை செல்லவேண்டும். மதுரையை விட்டு ஒருநாள் வெளியூர் போகவேண்டுமானால் கூட மனம் ஏனோ மறுக்கிறது.
காலை ஆறுமணிக்கு வைகை. நண்பருக்கு பெண் பார்க்கும் படலத்தில் பங்கெடுத்து விட்டு உடனே மதுரை திரும்ப வேண்டும். அன்ரிசர்வ் கம்பார்ட்மென்டில் வரிசை நீண்டு நிற்கிறது. அதிர்ஷடவசமாக ஐந்து பேருக்கும் இடம் கிடைத்தது. வசதியாக உட்கார்ந்திருக்கும் போது, கொஞ்சம் தள்ளி உக்காருங்க சத்தம் கேட்டு திரும்பி பார்த்தான் வினோத். இரண்டு இளம் பெண்கள் நின்று கொண்டிருந்தனர்.
திருச்சியிலே இறங்கிருவோம்…
எங்கே இறங்கினா எனக்கென்ன…மனது பேசியது…அமைதியாக நகர்ந்து உட்கார்ந்தான்.
மற்றொரு பெண் எதிர்வரிசையில் அமர்ந்தாள்.
வைகை வேகமாக போய்க் கொண்டிருந்தாள்.
ரயில் பெட்டிக்குள் தவழ்ந்து தவழ்ந்து ஒருவர் வந்தார். அனைவரும் தங்களது காலை மேலே தூக்கினர்.
தரையில் உள்ள தூசு குப்பைகளை பிரஸ் வைத்து துடைத்து எடுத்தார் தவழ்ந்து வந்தவர்.
ஒவ்வொருவரும் தங்களால் இயன்றதை அவருக்கு கொடுத்தனர்.
45 வயது மதிக்கதக்க பெண் மட்டும் அவள் முகத்தை வேறு பக்கமாக திருப்பிக் கொண்டாள்.
இரண்டு முறை கையசைத்து அவளிடம் காசு கேட்டுவிட்டு சத்தமில்லாமல் நகர்ந்தார்.
ரயில் திருச்சி வந்து நின்றது.
இரு பெண்களும் சொன்னபடியே இறங்கிச் சென்றார்கள்.
வினோத் இப்போது கொஞ்சம் வசதியாக அமர்ந்தான்.
மக்கள் அரசர அவசரமாக இறங்கவும் ஏறவும் செய்தார்கள்.
அந்த 45 வயது மதிக்கதக்க பெண்மணி ஜன்னல் வழியாக யாரையோ தேடுவது போல எட்டிப்பார்த்தாள்.
யாரைம்மா தேடுறீங்க …வினோத் கேட்டான்.
வாட்டர் பாட்டில் வாங்கனும் கடை ரொம்ப தூரத்துல இருக்கு …வண்டி எடுத்துட்டா ஓடி வந்து ஏற முடியாது…அதான் யோசிக்கிறேன்.
வினோத்தின் கரங்கள் உதவி செய்ய துடித்தது.
வீட்டார் புரிந்து கொண்டு கையை அழுத்தி உட்கார வைத்தனர்.
பேசாமெ இரு…
சிறிது நேரம் கழித்து தூரத்தில் நின்று கொண்டிருந்த ஒருவரை அழைத்து இருபது ரூபாய் கொடுத்து வாட்டர் பாட்டில் வாங்கித்தருமாறு கெஞ்சினாள்.
அவனும் தலையசைத்து கடைவரை சென்றுவிட்டு திரும்பி வந்தான்.
என்னாச்சு…வாட்டர் பாட்டில் எங்கே கேட்டாள்.
பாட்டில் இருபத்தைந்து ரூபாயாம்…இன்னும் அஞ்சு ரூபா வேணும்…
பர்ஸிலிருந்து எடுத்து கொடுத்தாள்.
வாங்கிக்கொண்டு வேகமாக சென்றான்
வெகு நேரமாகியும் அவன் வரவே இல்லை.
வண்டி புறப்பட்டது.
சுற்றும் முற்றும் பார்த்தாள் …அவன் பாட்டிலை எடுத்துக்கொண்டு ஓடிவருவான் என்று.
ப்ளாட்பார்ம் முடிகிற இடத்தில் கடைசி சிமென்ட் பெஞ்சில் கால் மேல் கால் போட்டு படுத்து கிடந்தான்.
கார்ட் கொடியசைத்தார்…வைகை வேகமெடுத்தது…அந்த அம்மாவுக்கு அதிக தாகமெடுத்தது.
Comments
Post a Comment