பூலோக வைகுண்டம்
திருப்பதி பூலோகத்தின் வைகுண்டம் பொருத்தமான வார்த்தை. பகவான் வெங்கடாஜலபதி அழைக்காமல் அவரை சென்று தரிசிக்க முடியாது என்று சொல்வார்கள். அதாவது, திட்டமிட்டு திருப்பதி செல்லமுடியாதாம். திடீரென்று இருக்குமாம் திருப்பதி பயணம.; ஆம்…அதுவும் உண்மைதான் . நானும் அப்படித்தான் சென்றேன்.
திருப்பதி செல்ல வேண்டும் என்று பலமுறை திட்டமிட்டும் என்னால் செல்லமுடியவில்லை.
வீட்டில் அனைவரும் ஒரு நாள் திருப்பதி செல்ல வேண்டும் என்று திடீரென்று முடிவெடுத்தார்கள் . உடனடியாக டிக்கெட் புக் செய்து , மறு நாள் காலையில் திருப்பதியில் தரிசனத்துனக்காக டிக்கெட் எடுக்கும் வரிசையில் நின்றோம் .
காலை ஏழு மணிக்கு திருப்பதியில் இறங்கியவுடன் , பேருந்து நிலையத்திலேயே ஒரு பகுதியில் தரிசனத்துக்கு டிக்கெட் வாங்குவதற்கு நீண்ட வரிசை நின்றிருந்தது. கையில் உள்ள லக்கேஜுடன் அப்படியே வரிசையில் நின்று விட்டோம் . வரிசை வளைந்து வளைந்து சென்றது. கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் வரிசையில் சென்று கம்ப்யூட்டரில் ரேகை வைத்து , டிக்கெட் வாங்கிவிட்டோம் . ஒரு டிக்கெட் கட்டணம் ரூபாய் 50, இரவு பத்து மணிக்கு தரிசனம் என்று எழுதியிருந்தது .
லாட்ஜுக்கு போனோம் . குளித்து சிற்றுண்டி அருந்திவிட்டு ஆட்டோவிலேயே காளகஸ்தி சென்றோம். ஆட்டோவுக்கு போக வர ரூபாய் 380 கேட்டார் . போகவர கிட்டதட்ட 80 கிலோமீட்டர் இருக்கும் . ரூபாய் 380 என்றால் பரவாயில்லை . வரும் வழியில் திருப்பதியிலிருந்து 6 கிலோமீட்டர் தொலைவிலுள்ள அலுமேலுமங்கை ஆலயம் சென்று தரிசனம் செய்தோம்.
மாலை நான்கு மணியளவில் லாட்ஜுக்கு வந்து உணவருந்தி , சிறிது ஓய்வெடுத்து ஆறு மணியளவில் திருமலை செல்வதற்கு பஸ் டிக்கெட் வாங்க வரிசையில் நின்றோம் . போகவர ஒரு டிக்கெட் ரூபாய் 44. அந்த பயணச்சீட்டை மூண்று நாட்களுக்குள் எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்தி கொள்ளலாம் . திருமலை செல்வதற்காக தேவஸ்தான பேருந்துகள் வரிசையாக நின்று கொண்டிருந்தன. சுமார் 27 கிலோமீட்டர் திருப்பதியிலிருந்து திருமலை . பயங்கரமான வளைவுகளுடன் மேலே மேலே அடுக்கடுக்கான மலைகள் . திறமையான ஓட்டுனர்கள் .வேகமாகவும் விவேகமாவும் பேருந்தை ஓட்டிச்சென்றார்கள். அவர்கள் பயணிகளை ஏற்றிச் சென்றவிதம் மிகவும் கவர்ந்தது.
கண்கொள்ளா இயற்கை காட்சிகள் , வழிநெடுகிலும் சுத்தமாக இருந்தது, மனதைக் கொள்ளை கொண்டது . அற்புதமான சாலைகள் , சாலையோர பூங்காக்கள் , களைப்பாற இடங்கள் , அசுத்தம் செய்யாதீர்கள் , புகைபிடிக்காதீர்கள் என்று ஆங்காங்கே போர்டுகள் .
பேருந்து மேலே போய்க்கொண்டிருக்கும் போது இரவு நேரத்தில் மேலிருந்து திருப்பதியைப் பார்த்தால் தங்கத்தை உருக்கி தெளித்து விட்டது போல் , கண் கொள்ளாக் காட்சி காணக்கிடைக்கிறது .வழியில் ஆங்காங்கே பேருந்தை நிறத்தி சோதனைகள் . மலைப்பாதை இவ்வளவு அழகாகவும் சுத்தமாகவும் இருப்பதை நினைத்தால் ஆச்சரியப்
பட வைக்கிறது.
பேருந்து திருமலையை சென்றடைந்தது . வித்தியாசமான தட்பவெப்பம், மிகவும் குளிர்ச்சியாக இருந்தது . கீழே திருப்பதியில் அவ்வளவாக குளிர் இல்லை. மலை மீது உள்ள பேன்ஸி பொருட்கள் விற்கும் கடைகள் பிரமிக்க வைத்தன . மக்கள் பாதுகாப்போடு ஆங்காங்கே அமர்ந்தும் , படுத்தும் சுதந்திரமாக இருந்தனர். கூட்டம் அதிகமாக இருந்தது . ஏழுமலையானைப் பற்றிய பாடல் காற்றில் இன்னிசையோடு கலந்து வந்தது .
முடி இறக்கும் இடம் எங்கிருக்கிறது என்று கேட்டு கேட்டு சென்றோம் . முடி இறக்குவதற்கு டிக்கெட் வாங்க வேண்டும் . வரிசையில் சென்று டிக்கெட் வாங்கினோம் .
டிக்கெட்டோடு சேர்த்து அரை பிளேடும் கொடுத்தார்கள் . டிக்கெட் எவ்வளவு என்று கேட்டபோது இலவசம் என்றார்கள் . முடி இறக்கும் இடத்தை கண்டுபிடித்து சென்றோம் .
வரிசையாக அமர்ந்திருந்தனர் . அவர்களுக்கு பின்னால் நம்பர் எழுதியிருந்தது . டிக்கெட்டில் என்ன நம்பர் இருக்கிறது என்று பார்த்து அந்த நம்பர் உள்ளவரிடம் சென்று டிக்கெட்டையும் அரை பிளேடையும் கொடுத்து அமர்ந்தால் அவர் நமக்கு மொட்டை எடுத்து விடுவார். அங்கேயே வரிசையாக குளியல் அறைகள், தண்ணீர் சுத்தமாகவும் தாராளமாகவும் வந்து கொண்டிருந்தது . குளிப்பதற்கு சுகமாக இருந்தது . ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து போகும் இடமாக இருந்தும் இவ்வளவு சுத்தமாக இருக்கிறது என்று நினைக்கும் போது பெருமையாக இருந்தது.
குளித்து வேறு உடையணிந்து ஏழுமலையானை தரிசப்பதற்கு ஆலயத்தை தேடி சென்றோம் . முதல் முதலாக செல்வதால் கேட்டு கேட்டு செல்ல வேண்டிய நிலை. ஆலயம் செல்வதற்கான தடுப்பு கம்பிகளால் ஆன வழி மிகவும் தொலைவிலிருந்து தொடங்கியது .அங்கே ஒரு காவலர் அமர்ந்திருந்தார், ஆலயத்துக்கு செல்லும் வழி இதுவா என்று கேட்டதற்கு ஆம் என்று பதிலளித்தார்.
அதில் நுழைந்து நீண்ட தூரம் சென்றோம் . வேறு யாரும் அந்த வழியாக செல்லாதலால் சந்தேகமாக இருந்தது .ஒரு பள்ளமான இடத்தில் அந்த படிகள் முடிவடைந்தது . அருகில் உள்ளவர்களிடம் ஆலயம் எப்படி செல்லவேண்டும் என்று வழி கேட்டபோது வழி காட்டினார்கள்.
மக்கள் வரிசையில் நின்று கொண்டிருந்தனர். ஐந்தாறு காவலர்கள் நுழைவாயிலில் நின்று கொண்டு அனுமதி சீட்டை பரிசோதித்து விட்டு உள்ளே அனுப்பினார்கள் . அரை மணி நேரத்தில் கம்யூட்டர் மூலமாக டிக்கெட்டை பரிசோதித்து விட்டு உள்ளே
அனுமதித்தார்கள். பக்தர்களெல்லாம் வேகவேகமாக ஓடினார்கள் . பின் எல்லாரும் ஒரு பெரிய அறையில் அமர்த்தபட்டனர். அந்த அறையில் “உங்களுக்கான நேரம் வரும் போது வரிசையாக செல்லவும் அதுவரை அமைதி காக்கவும்” என்று எழுதப்பட்டிருந்தது . டிவியில் ஏழுமலையானைப்பற்றிய தமிழ் மொழியில் படம் ஓடிக்கொண்டிருந்தது . இந்த அறையைப் போல மேலும் பல அறைகள் வரிசையாக இருக்கிறது. அறைகளுக்கு முன்னால் இரண்டு கிரில் கேட்டு போட்டிருந்தது. ஒவ்வொரு அறையாக திறக்க பக்தர்கள் ஓடினார்கள் . சிறிது நேரத்தில் நாங்கள் அமர்ந்திருந்த அறையையும் திறந்தார்கள். பக்தர்கள் முண்டியடித்துக்கொண்டு ஓடினார்கள் . குறுகிய தடுப்புக்கம்பிகளின் வழியாக மெல்ல மெல்ல நகர்ந்து ஏழுமலையானை நெருங்கியது . தங்கக்கோபுரம் தகதகத்தது.
ஆலய வாசலுக்குள் நுழைந்தவுடன் பக்தர்களின் வரிசை கட்டுப்பாடின்றி மிகவும் நெரிசலாக இருந்தது .
மெல்ல மெல்ல நகர்ந்து ஏழுமலையானுக்கு முன்னால் செல்லும் போது கோவிந்தா…கோவிந்தா…என்ற கோஷம் விண்ணை முட்டியது. ஏழுமலையான் ஒளி வெள்ளமாக கண்ணுக்கு தெரிந்தார் . நன்றாக தரிசனம் செய்து வெளியில் வந்து உண்டியல் செலுத்தி , தீர்த்தம் வாங்கி , பிரசாதம் வாங்கி , லட்டு வாங்கி வெளியில் வந்து பார்த்தால் அந்த ஒளி வெள்ளத்தில் ஆலயம் தகதகவென்றிருந்தது . எவ்வித கவலையோ பயமோ இன்றி மக்கள் படுத்திருந்தனர் . எங்களது மனநிலையும் அப்படித்தான் எங்கிருக்கிறோம் என்ற எண்ணமே இல்லாமல் , எந்த நினைவுகளும் இல்லாமல் ஆனந்தமாக இருந்தது . பூலோக வைகுண்டம் என்பது மிகவும் பொருத்தமான வார்த்தை .
அப்போதே பேருந்திலேறி திருப்பதி வந்து சேர்ந்தோம் . அறைக்குப் போகும் போது மணி ஒன்று இருக்கும் . ஓய்வு எடுத்துவிட்டு காலை 7.30 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு இரவு பத்து மணிக்கு ஊர் வந்து சேர்ந்தோம் . இரண்டு நாட்கள் தொடர்ந்து பேருந்தில் பயணம் செய்தும் அந்த ஏழுமலையான் அருளால் யாருக்கும் எவ்வித களைப்பும் இல்லை . மாறாக அனைவரும் உற்சாகத்துடன் காணப்பட்டனர் . திருமலையின் அற்புதக் காட்சிகள் இன்னும் மனதைவிட்டு நீங்கவில்லை .
Comments
Post a Comment