எல்லாம் அவன் செயல்
மாதவன் எதைப் பத்தியும் கவலை இல்லாதவன் போல இருப்பான் . ஆனா அவன் மனதுக்குள்ளே ஆயிரம் கவலைகள் தலை தூக்கும். என்ன செய்யப் போறோம் என்ன செய்யப் போறோம் என்று அவன் மனது அடிக்கடி கேட்டுக் கொண்டெ இருக்கும். தன்னை நெனைச்சு கவலை. அம்மாவை நெனெச்சு கவலை , தம்பியை நெனைச்சு கவலை, இப்படி மாறி மாறி கவலை பட்டுக் கொண்டே இருப்பான். வெளியில் பாத்தா ஹேப்பி மேன்.
கவலை வந்தாலும் அது கொஞ்ச நேரத்துக்கு தான் . மாதவன் தனக்குள்ளேயே சொல்லிக் கொள்வான் எல்லாம் அவன் பாத்துக்குவான் . எந்தப் பிரச்னையா இருந்தாலும் மாதவன் சொல்வது “எல்லாம் அவன் பாத்துக்குவான”. உண்மையிலேயே அவன் தான் பாத்துக்கொண்டிருக்கிறான் மாதவனை .
அவன் இல்லாமல் ஒரு காரியமும் நடக்காது என்பதில் மாதவனுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை. மாதவன் எதையும் எளிதில் நம்பக்கூடியவனில்லை. வாழ்க்கையில் அடிபட்டு அடிபட்டு ஒவ்வொரு காரியத்திலும் கிடைத்த அனுபவத்தை வைத்து அவன் இல்லாமல் எந்த காரியமும் நடக்காது என்று ஆணித்தரமாக சொல்கிறான்.
அவன் எவன் …அவன் தான் சிவன்.
மாதவனின் மனைவி சுகன்யா அருகில் வந்து அமர்ந்தாள் .
ஏதோ பிரச்னை இருக்கிறது என்று மாதவனுக்கு புரிந்தது
என்ன ? என்று கேட்டான்
வருசம் ஒன்னு ஆச்சு …நகை அடகு வச்சு…நோட்டீஸ் வரப்போகுது. சீக்கிரம் மீட்டுறதுக்கு வழியைப்பாருங்க.
யோசிச்சுக்கிட்டுத்தான் இருக்கேன்.
எவ்வளவு காலமா யோசிக்கிறது!
என்ன செய்யச்சொல்றே …முயற்சிதான் பண்றேன்.
முயற்சி பண்ணிக்கிட்டே இருங்க …அங்கே நகை மூழ்கிடப் போகுது.
எதுக்கு இவ்வளவு கவலை படுறே…எல்லாம் அவன் பாத்துக்குவான் .
சொல்லிவிட்டு மாதவன் ஏதோ எழுதிக்கொண்டிருந்தான்.
இப்படியே அவன் பாத்துக்குவான்…அவன் பாத்துக்குவான் என்று சொல்லிட்டு இருந்தா …கடைசிலே உங்களை எவனும் திரும்பிக்கூட பாக்கமாட்டான்.நான் சொல்றதெ சொல்லிட்டேன் என்னமும் செய்யுங்க போங்க…விருட்டென்று எழுந்து அடுக்களையில் நுழைந்தாள்.
மாதவன் யோசிக்க தொடங்கினான் . அவள் பக்கமும் நியாயம் இருக்கிறது. அவள் சொல்வதில் எந்த தவறும் இல்லை. ஆனால் உடனடியாக இவ்வளவு பெரிய தொகைக்கு எங்கே போக? சற்று குழம்பித்தான் போனான்.
மறுநாள் காலை வாசலில் யாரோ அழைப்பது போன்ற குரல்.
சுகன்யா சன்னல் வழியாக பார்த்தாள்.
வாங்க ராஜேஸ்வரி
உள்ளே வாங்க…
எப்படி இருக்கீங்க…
நல்லா இருக்கேன் …நீங்க எப்படி இருக்கீங்க…
குழந்தைகளெல்லாம் ஸ்கூலுக்கு போயிட்டாங்களா?
ஆமா…சுகன்யா …ரொம்ப நாளா ஆச்சு …ஒரு எட்டு பாத்துட்டு போகலாம்னு வந்தேன்.
தண்ணீர் கொடுத்தாள்… என்ன சாப்டுறீங்க காபி போடட்டுமா …குளிர் பாணம் தரவா…
அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் சுகன்யா…
நீங்க கொஞ்சம் டல்லா இருக்கிற மாதிரி தெரியுது என்ன விசயம்?
அதெல்லாம் ஒன்னுமில்ல ராஜி…நார்மலாத்தான் இருக்கேன்
அண்ணண் எங்கே?
அறைக்குள்ளெ இருக்கார்.
ஏதோ ஒரு வாட்டம் தெரியுதே…ராஜி விடுவதாக இல்லை.
சுகன்யாவுக்கு இதற்கு மேல் சொல்லாமல் இருக்க முடியவில்லை.
ஒன்னுமில்லை …நகை அடகுல்ல இருக்குது …அண்ணன் கண்டுக்காமெ இருக்கார் . நோட்டீஸ் வர நேரமாச்சு. ஒரு வருசம் முடிஞ்சிருச்சு . அந்த கவலை தான் முகத்துல தெரியுது .
இவ்வளவு தானா…இப்பதான் நான் வீட்டு ஒத்திப்பணம் வாங்கிட்டு வர்றேன் . நேரே இங்கெதான் வர்றேன் . ரெண்டு லட்சம் இருக்கு . இதெ வச்சு நகையை திருப்புங்க அப்புறம் மெதுவா கொடுங்க.
உங்களுக்கு ஏதாவது அவசரம்ன்னா…
அதெல்லாம் ஒன்னுமில்ல…பாத்துக்கலாம்
சுகன்யா மாதவனை அழைத்து விசயத்தை சொன்னாள்.
மாதவன் பணத்தை வாங்கிக் கொண்டு ராஜேஸ்வரிக்கு நன்றி சொன்னான்.
எதுக்குண்ணே நன்றில்லாம். இருக்குது உதவுறேன்.
மாதவன் பணத்தை வாங்கி எண்ணி முடித்தான் . சரியாக இருந்தது.
வாசலில் சைக்கிள் மணி ஒலித்தது. சார்…போஸ்ட்
சுகன்யா சென்று வாங்கி வந்தாள்
மாதவன் வாங்கிப் பிரித்தான் …வங்கியிலிருந்து நோட்டீஸ்
அதிர்ந்து போனான்.
எல்லாம் அவன் செயல்…ராஜியை அவன் தான் அனுப்பியிருக்கிறான். அவனின்றி ஓர்அணுவும் அசையாது.
Comments
Post a Comment