குரங்கு குடும்பத்திலும்...
அடர்ந்த காடு , அருவிகளின் சலசலப்பு . பல வகை கனிகளின் மணம் காற்றில் மிதக்கிறது . குரங்கு மரத்துக்கு மரம் தாவி பழங்களை ருசித்து ருசித்து கீழே எறிந்தது . குட்டிக்குரங்குகள் எடுத்து கடித்து சுவைத்தது .
ஏங்க…போதும் கீழே இறங்குங்க.
கொஞ்சம் இரு இந்தப்பழம் புதுசா இருக்கு பறிச்சு பாப்போம்.
சொன்னா கேளுங்க…கீழே விழுந்துறப்போறீங்க.
எப்பப் பாத்தாலும் ஒம் பக்கத்துலேயே இருக்கணும்னு நினைக்கீறீயா?
நான் சொல்றதைக் கேளுங்க …உங்களுக்கு மறதி வேறே ஜாஸ்தி கொப்பை புடிக்க மறந்துட்டீங்கன்னா அவ்வளவுதான்…
நம்ம…இந்த காடு பாத்தீயா…எவ்வளவு அழகா செழிப்பா…எல்லா வகையான பழங்களையும் உண்டு மகிழ வசதியா இருக்கு .
ஆமாங்க…சூப்பரா இருக்கு …என்று பெண் குரங்கு கழுத்தை கட்டிக் கொண்டது.
எங்க அம்மாவையும் கூட்டி வரணும். சொன்னது
நம்ம கூடவா…கழுத்திலிருந்து கையை விடுவித்தது.
ஆமா…அவங்க …இந்த மாதிரி காட்லல்லாம் அனுபவிச்சது கிடையாது.
என்ன பேசுற நீ…அவங்க அங்கே ஜாலியாத்தானே இருக்காங்க . வேணும்னா ஒரு வாரம் வந்து இருந்துட்டு போகட்டும். அவுங்க சொல்றதுக்கெல்லாம் எனக்கு ஆமாச்சாமி போட முடியாது.
ஆமாச்சாமி எதுக்கு போடுற முடியாதுன்னு சொல்ல வேண்டியது தானே !
முடியாதுன்னு சொன்னா வருத்தப் படுவாங்க சண்டை வரும். ஒரு வாரத்துக்குன்னா சமாளிச்சுருவேன்.
சரி உன் விருப்பம் ஒரு வாரத்துக்கே கூப்பிடலாம்.
அப்பா…அந்த மரத்துல ஏறுறேன்னு பல்டி அடிச்சு பாறையில விழுந்துட்டாம்ப்பா…
ஏன்டா…குட்டி அடிகிடி படலையே… தலையை தடவி விட்டது குரங்கு.
இவன் சைடுல தாண்டுறேன்னு சொல்லி மரத்துக்கு இடையில போயி மாட்டிக்கிட்டாம்ப்பா…
பாத்துடா…பாத்து விளையாடுங்க புது இடம் என்ன இருக்கு ஏது இருக்குன்னு தெரியாது.
ஏங்கூடயே ஒட்டிக்கிட்டு இருக்கீயே …பிள்ளைக விளையாடும் போது பக்கத்துல போயி நின்னா என்னா.
அந்த நவ்வா மரத்துக்குரங்கப்பாரு எப்ப பாத்தாலும் பிள்ளையெ தூக்கிட்டே திரியுது.
ஆமா…அவ ஒருத்தி…அது ஒங்க கண்ணை உறுத்திருச்சா…பக்கத்து காட்டுல இருந்து அவ மாமியா வந்திருக்கு குட்டி கூட விளையாடிரும்னு தூக்கிட்டே திரியுது .அது போனதுக்கப்புறம் பாருங்க குட்டி பாட்டுல விளையாடிகிட்டு திரியும்.
நீயும் அப்படித்தான் பண்ணுவியா?
இதுக தூக்கி திரியுற மாதிரியா இருக்குக. ஒவ்வொன்னும் எரும மாடாட்டம் இருக்கு.
காலைல கருவமரத்தடி குரங்கு பாறையடிக்கு போகும், அப்ப சொல்லிவிடுவோம் அம்மாவெ வரச்சொல்லி.
நீயே போயி கூட்டி வந்துற வேண்டியது தானே!
கால்ல கட்டெறும்பு கடிச்சது இன்னும் வலிக்குது.
மஞ்சனத்து புதருக்குள்ளே மறைச்சு வச்சு மாம்பழத்துல ரெண்டு அம்மாவுக்கு கொடுத்து விடு.
இங்க வந்து திங்கட்டுமே என்ன அவசரம் ஆத்தா புத்தி அப்படியே இருக்கு . ஒன்னு இருக்கு கூடாது, உடனே காலி பண்ணீரனும். ஆங்கே இருந்து என்ன கொண்டு வராக பாக்கலாம்.
சரி..சரி…விடு
அது.
சூரியன் மெல்ல மெல்ல மலை முகடுகளினூடே மறைய தொடங்கினான். வானவெளியில் வண்ணக்கதிர்கள் காலைபபரப்பி இளைப்பாறிக்கொண்டிருந்தது.
அப்பாடி பாறையடில இருந்து வர்றதுக்குள்ளே படாது பாடு பட்டு போனேன்.மொபைல் போனுக்கு டவர் வக்கிறாங்களாம். சுத்திசுத்தி வரவேண்டியதாப்போச்சு.
எங்கே ஒம் பொண்டாட்டி…
விளையாடுற குட்டிகளை கூப்பிடப்போயிருக்கிறா…இந்தா…வந்துட்டா…
வாங்கத்தை…
நல்லாருக்கியா…
இருக்கேன்…
வாங்கடா கண்ணுகுட்டிகளா…
குரங்கு குட்டிகளான்னு கூப்பிடுங்க அப்பத்தா…அதான் எங்களக்கு புடிக்கும்.
அப்பத்தா அழைக்க ,அம்மா குட்டிகளை இறுக்கிப்பிடித்துக்கொண்டாள். குட்டி அழத்தொடங்கியது.
யாருகிட்டேயும் போகமாட்டான் அம்மா குரங்கு சிரிச்சுக்கிட்டே சொன்னது.
போகப்போகப் சரியாயிரும்…மகன் குரங்கு சொன்னது.
அதுக்குள்ளே எனக்கு வயசாயிரும்.
குட்டிகளை இழுத்துக்கொண்டு உச்சிமரக்கிளையில் போய் உட்கார்ந்து கொண்டது .
அம்மா நீங்களும் போங்கம்மா…
என்னால அவ்வளவு தூரம் ஏற முடியாதுப்பா…உன்னால முடிஞ்சா ஒரு அதட்டுப்போட்டு கீழே இறங்கி வரச் சொல்லு .
ஏம்மா என்ன வயசாயிருச்சு …அவ்வளவு தூரத்துல இருந்து நடந்து வந்திருக்கீங்க , இந்தா இருக்க உச்சி கொப்புக்கு ஏற முடியலையா?
என்னம்மா பேசுறீங்க.
தலை சுத்துதுடா…மரத்து மேலலாம் முன்ன மாதிரி ஏற முடியலை.
நல்ல மரங்களும் பழங்களும் நிறைய இருக்கே போகும் போது தம்பிகளுக்கு கொஞ்ச பழம் கொடுத்து அனுப்பு …பாவம் அவங்கெ பொறிகளைப் பொறுக்கி சாப்பிட்டுக்கிட்டு திரியுறாங்கே.
சரிம்மா போகும் போது சொல்லுங்க . ஏன் உங்க மருமகளை கூட்டிப்போங்க அவளுக்குத்தான் எல்லா டேஸ்ட்டும் தெரியும் .
பொண்டாட்டியெ ஒரேதா புகழாதேடா…நாங்களும் முப்பது வருசத்துக்கு முன்னாடி இந்த மாதிரி விதவிதமான பழங்கள்லாம் சாப்பிட்டவங்கதான்.நீ சின்னகுட்டியா இருக்கும் போது விதவிதமான பழங்களை காடுமேடெல்லாம் அலைஞ்சு பறித்து உனக்கு தருவோம். எல்லாத்தையும் மறந்துட்டே போல இருக்கு.
உன்னால தானே அவளுக்கு எல்லா ருசியும் தெரியுது. அதெ என்னைக்காவது அவளோ நீயோ நெனைச்சுப்பாத்தீங்களா . வேண்டாம்ப்பா…எங்களுக்கு பழமே வேண்டாம். நீ கொடுக்கிறதுன்னா கொடு , இல்லைன்னா வேண்டாம் . அதென்னா எல்லாம் பொண்டாட்டி கையால செய்யுறே .
எனக்கு கால்ல கட்டெறும்பு கடிச்சு புன்னாகியிருக்கு அதனால தான் எல்லாம் அவளா பாத்துக்கிறா.
அந்த புளியடி குரங்கைப் பாத்தீயா கால்ல காட்டருமை மிதிச்சும் அவன் கல்லு மாதிரி திரியுறான் . பொண்டாட்டி நில்லுன்னா நிக்கிறா…உக்காருன்னா உக்காருறா…நீ கடடெரும்பு கடிச்சுருச்சுன்னு சொல்லி எல்லாத்தையும் பொண்டாட்டிகிட்டெ கொடுத்துட்டே… டேய் அவ நம்ம குடும்பத்துக்கு வந்தவ தானே கொஞ்சமாவது குடும்பத்தோட ஒட்டுறாளா பாரு. அவ நீ மட்டும் தான் சொந்தமுன்னு நினைக்கிறா. எப்படி பந்த பாசம் வளரும்?
மேல் கொப்பிலிருந்து மெதுவாக இறங்கி வந்தது. ரெண்டு குட்டியும் நல்லா தூங்கிட்டாங்க.
அம்மாவுக்கு சாப்பிட என்ன இருக்கு ?
நவ்வாப்பழம் வச்சிருக்கேன்…
நவ்வாப்பழமா! எனக்கு வேண்டாம் …சாப்பிட்டு சாப்பிட்டு நாக்கு தேஞ்சு போச்சு.
மாம்பழம் இருக்குல்ல இதெ எடுத்து அம்மாவுக்கு கொடு.
இதுக்குத்தான் எல்லாத்தையும் மறைச்சு வைக்கிறது . முனகிக்கொண்டே சென்றது.
சரிம்மா…நாளைக்கு பாறையடிக்கு காலைல புறப்பட்டாத்தான் சீக்கிரம் போய்ச் சேர முடியும்
அதனால நீயும் ஏம் பொண்டாட்டியும் மரங்களை சுத்திப்பாத்துட்டு அப்படியே நல்ல பழங்களையெல்லாம் பறிச்சுட்டு வந்திருங்க. இப்ப போனாத்தான் மத்த குரங்குகளெல்லாம் வர மாட்டாங்க. எல்லோரும் தூங்கிருப்பாங்கெ நல்ல பழங்கள் கிடைக்கும்.
சரிடா…ஒம் பொண்டாட்டிட்டெ சொல்லு.
ரெண்டு குரங்கும் கிளம்பிச் சென்றது. மரங்களுக்கிடையே சுற்றி திரிந்தது.
ஏம்மா…இது நல்லாருக்குமா?
நல்லாருக்காதுத்தை
இது நல்லாருக்குமாத்தை?
இது பாறையடியிலேயே கெடைக்கிது.
இது எப்படிம்மா இருக்கும்?
அதுல வெறும் கொட்டைதான்த்தை இருக்கும்.
இதெப்பாருங்க இனிப்பா வெறும் சாறா இருக்கும்.
வேண்டாம்மா எதோ கடிச்சிருக்கு.
இந்தப்பழம் நல்லா இருக்க மாதிரி இருக்கே
இல்லத்தை இது புளிக்கும்
சரி ஏதாவது நல்லதா பறிச்சுக்கொடு நேரம் வேறே ஆகிக்கிட்டு இருக்கு
அப்படி வாங்க வழிக்கு …மனதுக்குள் நினைத்துக்கொண்டது.
அங்Nயும் இங்கேயுமா தாவி தாவி கொஞ்சம் பழங்களை பறித்தது
வாங்கத்தை போகலாம்.
சரி வா போகலாம்.
பழம் பறிச்சாச்சுப்பா…பாரு
சூப்பரா இருக்குமா …நல்ல பழங்களா பறிச்சுருக்கா …இதுக்குத்தான் அவளை கூட்டிப் போகச் சொன்னேன்.
சரிம்மா அந்த புதருக்குள்ளே போயி தூங்கு…
அம்மா குரங்கு புதருக்குள்ளே சென்று படுத்தது. புதருக்குள்ளே ஒரே பழவாடை. தேடிப்பார்த்தது
செடிகளுக்கு மறைவில பழக்குமியல். அத்தனையும் பழம் பறிக்க போகும் போது நல்லா இருக்காதுன்னு சொன்ன பழங்கள் . வீட்டுக்கு கொண்டு போக வச்சிருக்கா போல இருக்கு .
இந்த மாதிரி விசயங்கள்ல்லாம் என்னைக்கு ஏங் குட்டிக்கு தெரிய வருதோ அன்னைக்குத்தான் அவனுக்கு புத்தி வரும். கண்ணாடி மாதிரி மனசு இருக்கிற ஏங் குட்டிக்கு இப்படி பொண்டாட்டி வாச்சிருக்கே. எத்தனை நாளைக்கு நாடகமாடுதுன்னு பாப்போம். நல்ல பழம் நல்ல பழம் ன்னு சொல்லி ஒண்ணுக்கும் ஆகாததை பறிச்சு கொடுத்திருக்கா… இதெ எடுத்துட்டு போக கூடாது. இங்கேயே விட்டுட்டு போயிடனும். யோசித்துக்கொண்டே தூங்கிப்போனாள்.
Comments
Post a Comment